Featured Posts

உயிருடன் உயர்த்தப்பட்ட ஈஸா நபி [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-39]

உயிருடன் உயர்த்தப்பட்ட ஈஸா நபி

ஈஸா(அலை) அவர்கள் யூதர்களுக்கு மத்தியில் சத்திய சோதனை செய்தார். அவர் யூத மத குருக்களின் துரோகச் செயல்களைத் தோலுரித்தார். மதத்தின் பெயரால் நடக்கும் அக்கிரமங்களுக்கு எதிராக சாட்டையாகச் சுழன்றார். யூத மத குருக்கள், மதத்தின் பெயரில் செய்யும் சுரண்டல்கள் குறித்தும், மதத்தில் அவர்கள் செய்த இடைச் செருகல்கள் குறித்தும் அவர் போதனை செய்தார். யூதர்கள் சதி செய்வதில் வல்லவர்கள். துரோகம் செய்வது அவர்களின் கூடப் பிறந்த குணம். எனவே
இயேசு என அழைக்கப்படும் ஈஸா (அலை) அவர்களை அன்றைய அரசுக்கு எதிராக செயல்படுபவராகச் சித்தரித்தனர். யூத மதத்தை நிந்தனை செய்வதாகவும் கூறினர்.

யூத குருக்களின் சதியால் ஈஸா நபியைக் கொலை செய்வதற்கான சதித்திட்டமும் தீட்டப்பட்டது. யூதர்களின் இச்சதிக்கு ஈஸா நபியுடன் கூட இருந்த ஒருவன் துணை நின்றான். சதி நடவடிக்கை குறித்து ஈஸா நபி அறிந்து கொண்டார். தன்னை இச்சதியில் இருந்து பாதுகாக்கும்படி அல்லாஹ்விடம் அவர் பிரார்த்தித்தார். இறுதி நபியின் உம்மத்தில் மீண்டும் அவர் வருவதற்காகவும் பிரார்த்தித்தார். அல்லாஹ் அவரின் பிரார்த்தனையை அங்கீகரித்தான். ஈஸா நபி தனது மறைவு பற்றியும் முஹம்மது நபியின் வருகைப் பற்றியும் அவரை ஏற்று பின்பற்றுவதன் அவசியம் குறித்தும் தனது சீடர்களுக்குப் போதித்தார். அவர்கள் ஈஸா நபியைக் கொல்ல சதி செய்தனர். அல்லாஹ்வும் அவர்களது சதியை முறியடிக்க நினைத்தான்.

யூதர்கள் பொதுவாக பொறாமைக் குணம் கொண்டவர்கள். ஈஸா நபியின் அற்புதங்களைக் கண்டு ஈமான் கொள்வதை விட்டுவிட்டு அவர் மீது பொறாமைக் கொண்டனர். இதனால் அரசனிடம் முறையிட்டு ஈஸா நபியைக் கொல்வதற்கான கட்டளையைப் பெற்றனர். ஈஸா நபியை அவர்கள் தேடிச் சென்றனர். ஈஸா(அலை) அவர்கள் தமது தோழர்களுடன் இருந்தார்கள். ஈஸா(அலை) அவர்கள் மயக்கமான உறக்க நிலையில் உயிருடன் வானத்திற்கு உயர்த்தப்பட்டார்கள். ஒருவனின் உருவம் ஈஸா நபியின் உருவம் போல் மாற்றப்பட்டது. அப்படி உருவம் மாற்றப்பட்டவர் துரோகியாக வர்ணிக்கப்படுகிறார், தியாகியாகவும்
வர்ணிக்கப்படுகிறார். ஈஸா நபியை அடையாளம் காட்ட வந்த துரோகியின் உருவம் ஈஸா நபியின் உருவம் போல் மாற்றப்பட்டது. வந்தவர்கள் அவரை ஈஸா என நினைத்து அழைத்துக் கொண்டு சென்று சிலுவையில் அறைந்தனர் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஈஸா(அலை) அவர்கள் தன்னுடைய தோழர்களிடத்தில், தனது உருவத்தில் மாற்றப்பட்டு தனக்காக உயிர்த்தியாகம் செய்யப் போவது யார்? என்று கேட்டபோது
ஒரு சீடர் முன்வந்ததாகவும், ஈஸா நபியைப் பிடிக்க வந்தவர்கள் அவரையே பிடித்துச் சென்றதாகவும் கூறப்படுகின்றது. ஈஸா நபி அவருக்கு சுவனம் கிடைக்கும் என நன்மாராயம் கூறினார்கள்.

எப்படியோ ஈஸா நபி என நினைத்து அவரைப் போல உருவம் மாற்றப்பட்ட ஒருவரைப் பிடித்துச் சென்று சிலுவையில் அறைந்தனர். ஈஸா நபியுடன் கூட இருந்தவர்களுக்கு, கொல்லப்பட்டது ஈஸா நபி அல்ல என்பது தெரியும். ஆனால் யூதர்களுக்கும் பொதுமக்களுக்கும் கொல்லப்பட்டது ஈஸா நபி அல்ல என்பது தெரியாது. எனவே கிறிஸ்தவர்களில் சிலரும் ஈஸா நபி கொல்லப்பட்டு விட்டார் என்று நம்பினர். பின்னாளில் கிறிஸ்தவ மதத்தில் நுழைந்த சிலர் இயேசு சிலுவையில் அறையப்பட்டார் என்றும், அதை நம்புபவர்களே பரலோகம் செல்வார்கள் என்றும் முதல் மனிதனின் பாவம் பரம்பரை பரம்பரையாக மனிதனிடம் இருந்து வருவதாகவும், பிறர் பாவத்தை நீக்கவே இயேசு சிலுவையில் உயிர் நீத்தார் என்றும் புதிய கொள்கையை உருவாக்கினர்.

ஈஸா(அலை) அவர்கள் கொல்லப்படவும் இல்லை, சிலுவையில் அறையப்படவும் இல்லை. அவரைப் போன்று உரு மாற்றப்பட்ட ஒருவரையே யூதர்கள் கொன்றனர். ஈஸா நபி உலக அழிவு நெருங்கும் போது வானில் இருந்து இறங்கி வருவார்கள். அந்தி கிறிஸ்து என்று கூறப்படும் தஜ்ஜால் எனும் குழப்பக்காரனை அழிப்பார்கள். பூமியில் அற்புதமான நீதியான ஒரு ஆட்சியை நடத்துவார்கள். பின்னர் இயற்கையாக மரணிப்பார்கள்.

ஈஸா நபியின் இந்த விபரங்கள் குறித்து குர்ஆனில் சுருக்கமாகப் பின்வரும் வசனங்களில் கூறப்படுகின்றது (4:157&159, 43:61, 3:54,55.)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *