பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பேநசீர் புட்டோ காட்டுமிராண்டி தாக்குதலில் உயிர் இழந்துள்ளார். இந்த தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதுடன், இறந்த அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.
அரசியல் படுகொலைகள் இந்தியாவில் நடைமுறைக்கு வருவதற்கு முன்பாகவே பாகிஸ்தானில் நடைமுறைக்கு வந்துவிட்டது. என்றாலும் இம்முறை சோகம் அதிகமாவே இருக்கிறது. கொல்லப்பட்டிருப்பவர் ஒரு பெண் என்பது மட்டுமே இதறக்குக் காரணம் அல்ல. ஏற்கனவே தனது தந்தையை அரசியல் படுகொலையில் பலிகொடுத்தவர்; முஸ்லிம் பெண்கள் அடக்கி ஒடுக்கியே வைக்கப்படுகிறார்கள் என்ற மேற்குலகின் வாதத்தைப் பொய்யாக்குவதற்கு நிகழ்கால சாட்சியாக விளங்கியவர் என்பதாலேயே இந்த சோகம்.
இந்தியாவிலிருந்து பிரிந்து ‘பாகிஸ்தான் இஸ்லாமியக் குடியரசு’ உருவான போது இஸ்லாமிய சிந்தனைவாதிகள் மகிழ்ச்சியாய் இருந்தனர். இந்த இஸ்லாமியக் குடியரசில் இஸ்லாமிய சட்டங்களைக் கொண்டு ஆட்சி நடத்தலாம்; பல்வேறு குழுக்களிடையே இஸ்லாம் கூறும் சகோதரத்துவம் எனும் கோட்பாட்டை நடைமுறைப்படுத்தி நாட்டை வளப்படுத்தலாம் என்ற எண்ணமே அவர்களின் மகிழ்ச்சிக்குக் காரணம்.
ஆனால் பாகிஸ்தான் உருவானதிலிருந்து இன்றுவரை இஸ்லாமிய சிந்தனைவாதிகள் பாகிஸ்தானின் அரசு அதிகாரத்தில் அமர இயலவில்லை. பெயரளவில் ‘இஸ்லாமியக் குடியரசு’ என்றாலும் பெரும்பாலும் அதன் ஆட்சியாளர்கள் அமெரிக்காவின் எடுபிடிகளாகவே இருந்துள்ளனர்.
இந்தியாவின் பொருளாதாரம் எப்படி குறிப்பிட்ட எண்ணிக்கையிலான குடும்பங்களிடம் சிக்கிக் கொண்டுள்ளதோ, அதேபோன்றே பாகிஸ்தானின் பொருளாதாரமும் 15 அல்லது 20 குடும்பங்களின் கைகளில்தான் உள்ளது. இந்தியாவில் உள்ள வணிக நிறுவனங்கள் நேரடி அரசியலில் பங்குபெறுவது இல்லை. ஆனால் பாகிஸ்தானில் அவைதான் முக்கிய அரசியல் கட்சிகளான உள்ளன. எனவேதான் இத்தகைய அரசியல் சித்து விளையாட்டுக்கள் நடைபெறுகின்றன. (நம்மூர் தொ.கா. நிறுவனங்களுக்குள் சமீப காலமாக நடக்கும் யுத்தங்கள் போன்று)
எதிர்பார்த்தது போன்றே இக்கொலைக்குக் காரணம் அல்காய்தாதான் என்று ஊடகங்கள் தங்கள் பரப்புரையைத் தொடங்கிவிட்டன.
நேற்று முன்தினம் கொடூரமாகக் கொல்லப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பேநசீர் புட்டோ மீதான தாக்குதலுக்கு அல்காயிதா அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டதாக தலைப்புச் செய்திகளில் சொல்லப்பட்டது.
“எனக்கு எது நடந்தாலும் அதற்கு முஷாரப்தான் பொறுப்பாவார். அவரது ஆட்சியில் நான் மிகவும் பாதுகாப்பற்றவளாக ஆகியுள்ளேன். எப்போதும் பயத்துனேடேய வாழும் நிலைக்கு முஷாரப் ஆட்சியாளர்கள் தள்ளியுள்ளனர் “என்று ஒரு மின்னஞ்சல் பேசஸீரின் அமெரிக்க செய்தித் தொடர்பாளரும் , ஆலோசகருமான மார்க் சீகலுக்கு அனுப்பப் பட்டுள்ளது.
அந்த மின்னஞ்சலை , சிஎன்என் தொலைக்காட்சியின் உல்ப் பிளிட்சருக்கு சீகல் அனுப்பி வைத்திக்கிறார். பேநஸீரு கொல்லப்பட்டால் மட்டுமே இந்த மெயிலை வெளியிட வேண்டும் என்ற நிபந்தனையையும் அவர் விதித்திருக்கிறார்.
மேலும், தனக்கு பாகிஸ்தானில் உள்ள தலிபான் , ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் , அல் கொய்தா, கராச்சியைச் சேர்ந்த ஒரு தற்கொலைப் படை தீவிரவாத அமைப்பு ஆகியவற்றால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும்
பேநஸீர் முன்பே கூறியிருந்தார்.
ஒவ்வொரு தாக்குதலின் போதும், தாக்குதல் நடந்த சிலமணி நேரங்களுக்குள் இன
்ன தீவிரவாத அமைப்புதான் காரணம் என்று உடனடியாகத் தீர்ப்பெழுதும் பொறுப்பற்றத் தனத்தை யாரும் கண்டு கொள்ளாமல் இருப்பது வேதனை கலந்த வேடிக்கை.
குற்றவியல் புலணாய்வில் சாட்சியங்களால் நிரூபிக்க முடியாத வழக்குகளை முடிவுக்குக் கொண்டுவர “காற்றைக் கைது செய்” (Arrest the Wind) என்ற சொல்லாடல் நடைமுறையில் உள்ளது. ஏறத்தாழ இதைப்போன்றுதான் உள்ளது குற்றம் நடந்த உடனேயே இன்ன அமைப்புதான் காரணம் என்பதும் !
அல் காயிதா அல்லது வேறெந்த பயங்கரவாத அமைப்பும் ஏன் இத்தகைய பயங்கரவாதச் சம்பவங்களுக்குப் பொறுப்பேற்க வேண்டும் ? அவ்வாறு பொறுப்பேற்றுக் கொண்டால் தாங்கள் பிடிபடும் பட்சத்தில் தண்டிக்கப் படுவோம் என்பது இவர்களுக்குத் தெரியாதா?
பேநசீர் படுகொலையை, இஸ்லாத்தின் பெயரைச் சொல்லிக் கொண்டு எவரும் நியாயப் படுத்த முடியாது. ஏனென்றால் போர்க்களத்தில் கூட எதிரியின் பெண்களைக் கொல்லக் கூடாது என்பது இஸ்லாமியப் போர் நெறிமுறை.
பேநசீர் புட்டோ மேற்கத்தியப் பின்னணியில் ஆட்சி செய்தவர் என்றாலும், இஸ்லாம் பெண்களுக்கு எதிரான அடக்குமுறை மார்க்கம் என்று குற்றம் சுமத்தப் பட்டபோதெல்லாம், முன்னுதாரணமாகத் திகழ்ந்து மேற்கத்திய ஊடகங்களின் வாயை அடைத்தவர்.
பேநசீர் புட்டோவை அல்காயிதாவினர்தான் படுகொலை செய்திருப்பார்கள் என்ற யூகமும் சரியல்ல. அல்காயிதாவினருக்கு தொல்லை கொடுத்ததால், அவர்கள்தான் பழிவாங்கி இருப்பார்கள் என்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. ஒன்பதாண்டுகள் நாடு கடத்தப்பட்டிருந்த முன்னாள் பிரதமரால் அல்காயிதாவுக்கு இடைஞ்சல் என்பது நம்பக்கூடியதாக இல்லை.
அமெரிக்காவின் நெருக்குதலால் அல்காயிதாவுக்கு முஷாரஃப் கொடுத்த இடைஞ்சல்களை விட பேநசீர் புட்டோ ஒன்றும் செய்து விடவில்லை. முஷாரஃபுடன் சமரசமாகி அமெரிக்காவிற்கு வால் பிடிப்பார் என்று நம்பப் பட்ட பேநசீர் புட்டோ, நாடுதிரும்பியதும் முஷாரஃபிற்கு எதிராகக் களமிறங்கியது, முஷ்ராஃபின் கீழ் இயங்கும் இராணுவ துர்ப்பிரயோகத்தைச் சாடி , சரியான சந்தர்ப்பத்தில் மக்களிடம் எடுத்துச் சென்று, முஷராஃப் இராணுவ ஜெனரல் பதவியைத் துறக்கச் செய்தததால் முஷராஃப் ஆதரவு பெற்றவர்கள். இப்படுகொலையைச் செய்திருக்க வாய்ப்பிருக்கிறது.
இதுபோன்ற படுகொலைகளைத் கச்சிதமாகச் செய்து முடிப்பதில் இஸ்ரேலின் மொசாத் மற்றும் அமெரிக்கவின் CIA வினர்தான் கில்லாடிகள். மறந்தும்கூட எந்த ஊடகமும் இந்தக் கோணத்தில் செய்தி வெளியிடவில்லை. சமீபத்தில் இஸ்ரேலின் முக்கிய அதிகாரி ஒருவர் முஷராஃபிற்குப் பிறகு ராணுவ ஜெனரலாக பதவியில் இருக்கும் அஸ்ஃபாக் கியானியை பாகிஸ்தானிற்கு வந்து ரகசியமாகச் சந்தித்துச் சென்றிருப்பதும் இச்சந்தேகத்தை அதிகரிக்கிறது.
அல்காயிதாவும் பின்லேடனும் நல்லவர்களா? அவர்களை ஏன் சந்தேகப் படக்கூடது என்று கேட்கலாம். கடந்த சில மாதங்களுக்குமுன் FBI வெளியிட்ட 9/11 குற்றவாளிகள் பட்டியலில் உசாமா பின்லேடன் பெயர் தவிர்க்கப் பட்டிருந்தது . இது ஒன்றும் தவறுதலாக விடுபட்டவில்லை. 9/11 சம்பவத்திற்கு உசாமா பின்லேடனைக் குற்றம் சொல்லப் போதுமான ஆதாரங்கள் (No Hard Evidence) என்று FBI அறிக்கையை வெளியிட்ட அதிகாரியே விளக்கமும் சொல்லி இருந்தார்.
பின்லாடன் பெயரைச் சொல்லி அமெரிக்கா சீரழித்த இரு நாடுகள் மற்றும் ஆறு இலட்சத்திற்கும் அதிகமான உயிர்களுக்கு யாரைக் கைது செய்வது ?
கொலைகாரர்களுக்கு கண்டனங்களையும், இறந்தவர்களுக்கு இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரின் கவீட்டிலும் அவரது நாட்டிலும் இறைவன் அமைதியை ஏற்படுத்துவானாக.
//பின்லாடன் பெயரைச் சொல்லி அமெரிக்கா சீரழித்த இரு நாடுகள்//
நல்லடியாரே,
தகவல் பிழை உள்ளது. அமெரிக்க சீரழித்தது இரு நாடுகளை மட்டும்தானா? பாலத்தீன், சூடான் போன்ற நாடுகளும் உள்ளனவே.
// மற்றும் ஆறு இலட்சத்திற்கும் அதிகமான உயிர்களுக்கு யாரைக் கைது செய்வது ?//
கவித்துவமான உங்கள் தலைப்பு கூறுவதுபோன்று காற்றைத்தான்.