அஷ்ஷெய்க் MI அன்வர் (ஸலபி) -கிழக்குப் பல்கலைக் கழகம்-
இன்று உலகளாவியரீதியில் சில நபர்களையும் சம்பவங்களையும் நினைவுகூறும் முகமாக விஷேட தினங்கள் நிர்ணயிக்கப் பட்டு அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது நடைமுறையில் உள்ள சர்வதேச அகதிகள் தினமானது 2000 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் சிறப்புத் தீர்மானமொன்றின்படி அகதிகளுக்கான தமது ஆதரவை தெரிவிக்கும் வகையில் பிரகடனப்படுத்தப்பட்டது. இத்தினத்தில் உலகின் பல்வேறு பகுதிகளிலும் வாழும் அகதிகளை நினைவுகூறும் வகையில் தேசிய சர்வதேச மட்டங்களில் பல நிகழ்வுகள் ஒழுங்குசெய்யப்படுகின்றன.
2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி உலகளவில் 1 கோடியே 52 இலட்சம் பேர் அகதிகளாக வாழ்வதாக UNHCR யின் உத்தியோகபூர்வ அறிக்கையொன்று கூறுகிறது. இவர்கள் அரசியல் சமய சமூக இன மற்றும் பொருளாதார காரணிகளால் விரும்பியோ விரும்பாமலோ இந்த அகதி வாழ்க்கையின் அவலத்தை அனுபவித்துவருகின்றனர். இந்த சந்தர்ப்பத்தில் இஸ்லாமிய வரலாற்றின் சில அத்தியாயங்களை சற்று பின் நோக்கிப் பார்க்கும் போது இந்த அகதி வாழ்க்கையை அனுபவித்த இஸ்லாமிய சமூகத்தை நாம் காணலாம். இஸ்லாமிய பரிபாஷையில் அகதி வாழ்க்கையை நோக்கிய பயணமானது ஹிஜ்ரத் எனவும் அகதிகள் முஹாஜிரூன் எனவும் அறியப்படுவதை விளங்களாம்.
அல்லாஹ்வின் மார்க்கம் இஸ்லாமாகும். இதன் போதனைகளை இந்த பூமிப் பந்தில் நிம்மதியாக நிலை நாட்ட சந்தர்ப்பம் அளிக்கப்படாதப் பட்சத்தில் தமது இருப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வேளை அகதிகளாக வெளியேறிச் செல்வதே இந்த சொற்பதத்தின் உண்மையான கருத்து என்பதை புரியலாம். இவ்வாறு வெளியேறிச் செல்வது இஸ்லாத்தை நேசிக்கின்ற அதன் போதனைகளை செயற்படுத்த விரும்புகின்மைற ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கட்டாயக் கடயாகும்.
“எவர்கள் தமக்குத்தாமே அநீதி இழைத்தவர்களாக இருக்கும் நிலையில் அவர்களது உயிர்களை வானவர்கள் கைப்பற்றுகின்றார்களோ அவர்களிடம் நீங்கள் எங்கு இருந்தீர்கள் எனக் கேட்பர். அவர்கள் நாம் பூமியில் பலவீனப்படுத்தப்பட்டவர்களாக இருந்தோம் எனக் கூறுவர். அல்லாஹ்வின் பூமி அதில் நீங்கள் ஹிஜ்ரத் செய்ய விசாலமானதாக இருக்கவில்லையா? எனக் கேட்பர் இத்தகையோரின் தங்குமிடம் நரகமாகும். அது செல்லுமிடங்களில் மிகக் கெட்டதாகும்.” (04-96)
அல்லாஹ்வின் மார்க்கமாகிய இஸ்லாத்தின் செய்தியை உலகில் பரப்ப வந்த நபிமார்கள் அவர்களை ஈமான் கொண்ட சமூகத்தினர் அதற்காக கொலை செய்யப்பட்டனர். நாடுகளை விட்டும் துரத்தப்பட்டனர். உடமைகள் உயிர்களை இழந்தனர். இந்த வகையில் உலகில் அகதி வாழ்க்கையை ஆரம்பமாக அனுபவித்தவர்கள் நபிமார்கள்களும் அவர்களது சமூகத்தினரும்தான் என்று கூறும் அளவுக்கு பல சான்றுகளை நாம் காணலாம்.
“இறை நிராகரிப்பாளர்கள் தமது தூதர்களிடம் எமது பிரதேசத்தை விட்டும் உங்களை நாம் வெளியேற்றுவோம் அல்லது நீங்கள் நமது மார்க்கத்திற்கு மீள வேண்டும் எனக் கூறினர்.” (24-23)
அல்லாஹ்வை நம்பும் ஒரு முஸ்லிம் இந்த வாழ்க்கையை அனுபவிக்க நேரிடும் என்பதை அல்லாஹ்வின் தூதர்களின் வரலாறுகள் எமக்கு உணர்த்துகின்றன. கொள்கையில் உறுதியாக இருப்போர் இதை அவசியம் அனுபவித்தே தீர வேண்டுமென்பது இறைவனின் நியதியாகும்.
“எவர்கள் எங்களது பிரதேசங்களை விட்டும் அநியாயமாக வெளியேற்றப்பட்டார்களோ அவர்கள் எங்களது இரட்சகன் அல்லாஹ்தான் என்று கூறியதற்காகவே தவிர வேறு எதற்காகவும் வெளியேற்றப்படவில்லை” (22-40)
அல்லாஹ்வின் தூதர் நபி இப்றாஹீம் (அலை) அவர்கள் தவ்ஹீத் பிரச்சாரத்தை மேற்கொண்ட போது பல சோதனைகளையும் வேதனைகளையும் அனுபவித்தார்கள். தனது தந்தைக்கு இஸ்லாத்தின் செய்தியை எத்திவைத்த போது அவரது தந்தை
“இப்றாஹீமே நீ எனது தெய்வங்களை புறக்கணிக்கின்றாயா? நீ இதை தவிர்ந்து கொள்ளவில்லையாயின் உன்னைக் கல்லால் எரிந்து கொல்லுவேன் என்னை விட்டும் வௌயேறி விடு என (அவரது தந்தை) கூறிய போது உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும். உங்களுக்காக என் இரட்சகனிடம் நான் பாவ மன்னிப்புக்கோருவேன்” (19 46-48)
என அவர் கூறினார்.
பெற்றெடுத்த அவரது தந்தையின் துணை கொண்டு அவரது சமூகம் அவருக்கு பல கொடுமைகளை அனுபவிக்கச் செய்தார்கள் என்பதை நாம் அறிவோம்.
நபி (ஸல்) அவர்களும் அவரது தோழர்களும் கூட தமது சொந்த மண்ணிலேயே அகதி வாழ்க்கையை சந்தித்ததார்கள் என்பதை நாம் காணலாம். ஷிஃபு அபூதாலிப் எனப்படும் பள்ளத்தாக்கில் தடுத்து வைக்கப்பட்டு பொருளாதார தடைக்குள்ளாக்கப்பட்டு மூன்று வருடங்கள் வதைக்கப்பட்ட வரலாற்றைப் பார்த்தால் இஸ்லாத்தை வாழ வைப்பதற்காக ஒரு முஸ்லிம் அகதி வாழ்க்கையை அனுபவிக்க நேரிடும் என்பதை புரியலாம். நபி (ஸல்) அவர்கள் மதீனா நோக்கி ஹிஜ்ரத் சென்றதும் அதற்கு முன்னர் அவர்களது தோழர்கள் அபீசீனியா நோக்கி ஹிஜ்ரத் பயணமும் அகதி வாழ்க்கையின் ஒரு சில வரலாற்று அத்தியாயங்களே என்பதை நாம் விளங்களாம்.
எனினும் அகதிகளின் வாழ்வாதார அந்தஸ்தை மேம்படுத்த அனுஷ்டிக்கப்படும் இந்த சர்வதேச அகதிகள் தினத்திற்கு 1400 ஆண்டுகளுக்கு முன்பே அதற்கான ஒரு தீர்வை இஸ்லாமிய மார்க்கம் முன்வைத்துள்ளதை நாம் காணலாம். மக்காவில் இருந்து மதீனா நோக்கி வந்து அகதி வாழ்க்கையை அனுபவித்த நபி தோழர்களுக்கு மதீனத்து அன்சாரிகள் செய்த உதவிகள் பற்றியும் அவர்களது கூலிகள் பற்றியும் அல்லாஹ் சிலாகித்து பேசுவதை நாம் காணலாம்.
இவர்களுக்கு முன்னர் இருப்பிடத்தையும் இறை நம்பிக்கையையும் இருப்பாக்கிக் கொண்டோர் தம்மளவில் ஹிஜ்ரத் செய்தவர்களை (அகதிகளை) நேசிப்பார்கள். இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளவற்றில் (அகதிகளுக்கு) எவ்வித குரோதத்தையும் உணரமாட்டார்கள். தமது தேவைகளை விட பிறரின் தேவைகளை முற்படுத்துவார்கள். (59-09)
எனவேதான் அகதிகளாக உருப் பெரும் எம் சகோதரர்களுக்கு நாமும் அடைக்கலம் கொடுத்து அல்லாஹ்வின் அன்பையும் அருளையும் பெறுவோமாக!