Featured Posts

இஸ்மாயில் நபியும்… ஆடும்… [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-17]

நபி இப்ராஹிம்(அலை) அவர்கள் முற்காலத்தில் வாழ்ந்த ஒரு நபி ஆவார்கள். இவர்களுக்கு நீண்ட காலமாக குழந்தைகள் எவரும் இருக்கவில்லை. நன்றாக வயது சென்ற பின்னர்தான் இஸ்மாயில் என்றொரு ஆண் குழந்தை கிடைத்தது. அதற்கும் பல வருடங்கள் கடந்த பின்னர் இஸ்ஹாக் என்றொரு குழந்தையும் கிடைத்தது. இப்ராஹீம் நபி இயல்பிலேயே மிகவும் இரக்க குணம் கொண்டவர். உங்களைப் போன்ற குழந்தைகள் மீது அதிக அன்பு கொண்டவர். தனது வயோதிக காலத்தில் கிடைத்த குழந்தை மீது அன்பைப் பொழிந்தார்கள்.குழந்தையோடு பாசத்தோடும் நேசத்தோடும் பழகினார்கள்.

அல்லாஹ்வின் கட்டளை

இந்த சந்தர்ப்பத்தில் தான் குழந்தை இஸ்மாயிலையும் அவரது தாயார் அன்னை ஹாஜரா அவர்களையும் மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியான (இப்போது) கஃபா அமைந்துள்ள மக்கா பூமியில் விட்டுவிட வேண்டும் என்ற கட்டளை அல்லாஹ்விடமிருந்து வந்தது. இப்ராஹிம் நபி எந்த சந்தர்ப்பத்திலும் இறை கட்டளைக்கு மாறு செய்யாதவர். அல்லாஹ்வின் கட்டளைப்படி இருவரையும் மக்கா பூமியில் விட்டுவிட்டு வந்தார்கள்.

பின்னர் இப்ராஹிம் நபி ஒரு கனவு கண்டார்கள். நபிமார்களுடைய கனவுகள் வஹி எனும் வேத வெளிப்பாடுகளாகும். அவர்களுடைய கனவில் ஷைத்தான் விளையாட முடியாது. இப்ராஹிம் நபி தனது அருமை மகன் இஸ்மாயிலை அறுப்பது போல் அந்தக் கனவு அமைந்திருந்தது. இதன்மூலம் தனது மகனை அறுக்க வேண்டும் என அல்லாஹ் கட்டளையிடுவதை நபி இப்ராஹிம்(அலை) அறிந்து கொண்டார்கள். அல்லாஹ் சொன்னால் ஏன்? எதற்கு? என்று காரணம் கேட்காமல் செய்ய வேண்டும். அல்லாஹ்வின் கட்டளைக்கு எதிராக எமது பகுத்தறிவு அமைந்திருந்தாலும் கூட மறுத்துவிடக் கூடாது. அல்லாஹ்வின் கட்டளைதான் முதன்மையானது. எனவே, இப்ராஹிம் நபியவர்கள் அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றுவதில் உறுதியாக இருந்தார்கள். அன்புக் குழந்தை இஸ்மாயிலை அறுத்துவிடுவது என்ற முடிவில் எவ்வித மனஉறுத்தலும் இல்லாமல் உறுதியாக இருந்தார்கள். மக்கா வந்த இப்ராஹிம் நபியவர்கள் தனது அன்பு மகனை சந்தித்தார்கள். அவர் அப்போது தந்தையுடன் சேர்ந்து பணிசெய்யக் கூடிய அளவுக்கு வளர்ந்திருந்தார். நபி இப்ராஹிம்(அலை) அவர்கள் மகனை அறுத்துப் பலியிட வேண்டிய இடத்திற்கு அழைத்துச் சென்றார்கள். அங்கே சென்ற நபி இப்ராஹிம் அவர்கள் தனது அருமை மகனை நோக்கி,

“எனதருமை மகனே! நான் உங்களை அறுப்பது போல் கனவு கண்டேன். உங்களது முடிவு என்ன?” எனக் கேட்டார்கள். தவறு செய்த பிள்ளைக்குத் தந்தை அடிப்பதற்கு கம்பை எடுத்தாலே பிள்ளை வீட்டை விட்டும் ஓடிவிடுகின்றது.

இப்ராஹிம் நபி கையில் கத்தியுடன் “அல்லாஹ் உன்னை அறுக்கச் சொல்கின்றான். நீ என்ன சொல்கின்றாய்” என்று கேட்கிறார்கள். இஸ்மாயில் நபி எந்தத் தயக்கமும் இல்லாமல் தடுமாற்றம் இல்லாத குரலில். “எனதருமைத் தந்தையே! அல்லாஹ் உங்களுக்கு என்ன செய்யச் சொன்னானோ அதைச் செய்யுங்கள். இன்ஷாஅல்லாஹ் நான் பொறுத்துக் கொள்கின்றேன்!” எனக் கூறினார்கள்.  அல்லாஹ்வின் கட்டளைக்காகத் தனது உயிரையும் பலியிடத் துணிந்த அவர்களின் உயர்ந்த பண்பைப் பாருங்கள்.

மகத்தான தியாகம்

இப்ராஹிம் நபி அறுக்க உறுதி கொண்டு விட்டார்கள். அவரது அன்பு மகனான இஸ்மாயீலும் உயிரைக் கொடுக்க இணங்கி விட்டார். இப்ராஹிம் நபி அறுக்கத் தயாரான போது அல்லாஹ்விடமிருந்து ஓர் அழைப்பு வந்தது. “இப்ராஹீமே… நீங்கள் உங்கள் கனவை உண்மைப்படுத்தி விட்டீர்கள். உங்களது இந்த மகத்தான தியாகத்தின் காரணமாக உங்களை நான் முழு மனிதகுலத்துக்கும் இமாமாக, தலைவராக, முன்மாதிரியாக ஆக்குகின்றேன்” என்று கூறினான். அதேவேளை, இஸ்மாயில் நபிக்குப் பகரமாக ஒரு ஆட்டை அல்லாஹ் இறக்கி அதனை அறுக்கு-மாறு கட்டளையிட்டான்.

இஸ்மாயில் நபிக்குப் பகரமாக ஒரு கொழுத்த ஆடொன்று அங்கே அறுக்கப்பட்டது. இப்ராஹீம் நபி, இஸ்மாயீல் நபி ஆகிய இந்த இருவரினதும் மகத்தான தியாகத்தை முன்னிட்டு உழ்ஹிய்யா எனும் மார்க்கக் கடமையை அல்லாஹ் விதித்தான். முஸ்லிம்களின் இரண்டு பெருநாட்களில் ஒன்றான ‘ஈதுல் அழ்ஹா’ எனும் தியாகத் திருநாளில்தான் இச்சம்பவம் நடந்தது. இந்தத் தியாகத்தை நினைவு கூறும் முகமாக முஸ்லிம்கள் இந்த நாளில் ஆடு, மாடு, ஒட்டகம் என்பவற்றை அறுத்து அதன் மாமிசத்தை ஏழை எளியவர்களுக்கும், உறவினர்களுக்கும் மற்றும் அயலவர்களுக்கும் வழங்கி வருகின்றனர்.

அல்லாஹ்வுக்காக எதையும் செய்யும் தியாக எண்ணத்தை வளர்ப்பது இதன் நோக்கங்களில் ஒன்றாகும். நாமும் அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு முழுமையாக அடிபணிந்து இப்ராஹீம், இஸ்மாயீல் நபிமார்கள் போன்று நடப்போம். இந்தச் சம்பவத்தை அல்குர்ஆனில் 37:101 முதல் 105 வரையான இடங்களில் குறிப்பிட்டுக் காட்டுகின்றது.

‘எனவே சகிப்புத்தன்மை மிக்க ஒரு மகன் குறித்து அவருக்கு நாம் நன்மாராயம் கூறினோம்.’ ‘அவருடன் இணைந்து செயல்படும் பருவத்தை (இஸ்மாயீலாகிய) அவர் அடைந்த போது “என்னருமை மகனே! உன்னை நான் அறுப்பதாக நிச்சயமாகக் கனவில் கண்டேன். உனது அபிப்பிராயம் என்ன?” எனக் கேட்டார். அ(தற்க)வர், “என்னருமைத் தந்தையே! உங்களக்கு ஏவப்பட்டதை நீங்கள் செய்யுங்கள். ‘இன்ஷாஅல்லாஹ் (அல்லாஹ் நாடினால்) என்னைப் பொறுமையாளர்களில் நீங்கள் கண்டுகொள்வீர்கள்! ” என்று கூறினார்’ ‘அவ்விருவதும் (அல்லாஹ்வுக்குக்) கட்டுப்பட்டனர். இன்னும் அவர் (மகனாகிய) இவரை நெற்றி நிலத்தில்படக் கிடத்தியபோது, ‘இப்ராஹீமே! நிச்சயமாக நீர் கனவை உண்மைப்படுத்தி விட்டீர் என நாம் அவரை அழைத்தோம். நிச்சயமாக நாம் இவ்வாறே நன்மை செய்வோருக்குக் கூலி வழங்குவோம்’.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *